Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு - கரோனா முதல்கட்ட நிவாரண நிதி வழங்கும் பணி தொடக்கம் :

கரோனா முதல்கட்ட நிவாரணத் தொகை வழங்கும் பணியை, கோவையில் தொடங்கி வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி. படம்:ஜெ.மனோகரன்

கோவை/உடுமலை/உதகை

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கரோனா முதல்கட்ட நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையத்தில் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நிவாரணத் தொகை வழங்கும் பணியை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் 1,401 ரேஷன் கடைகளைச் சேர்ந்த 10,18,637 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்தத் தொகை வழங்கப்படுகிறது’’ என்றார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்றுநடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். செய்தித்துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, முதல்கட்ட நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, “இத்திட்டத்தின் மூலமாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள 7,30,279 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்” என்றார்.

போலீஸாருக்கு பாராட்டு

பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் நியாயவிலைக் கடைகள் மற்றும் சாலைகளில் ஊரடங்கு கடமை ஆற்றிய போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல் பாராட்டு தெரிவித்தார்.

உதகை

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா இளித்தொரை கிராமம் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘ரேஷன் கடைகள் இன்று இயங்கும்’

கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழக அரசின் சார்பில், கரோனா முதல்கட்ட நிவாரண நிதி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும், 16-ம் தேதி (இன்று) ரேஷன்கடைகள் வழக்கம்போல இயங்கும். மக்களுக்கு நிவாரணத் தொகை இன்றும் வழங்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x