Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 2-ம் நாள் ஊரடங்கு - மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் திரண்டனர் :

தூத்துக்குடியில் நேற்று மதியத்துக்கு மேல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் வந்தவர்களை, ஊரடங்கு விதிமுறைகளை தெரிவித்து போலீஸார் எச்சரித்து அனுப்பினர். படம்: என்.ராஜேஷ்

திருநெல்வேலி/தென்காசி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று 2-வது நாள் ஊரடங்கு அமலில் இருந்தநிலையில், மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் திரண்டனர். சாலைகளில் இருசக்கர வாகனங்கள், கார்கள் அதிகளவில் இயக்கப்பட்டன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குஅமல்படுத்தப்பட்ட முதல் நாளில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திருந்தனர். பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடியிருந்தன. நேற்று 2-வது நாள் ஊரடங்கின்போது காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காலையில் கூட்டம் அதிகமிருந்தது.

அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முழு அடைப்பில் பொதுமக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மளிகை மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் பொருட்கள், காய்கறிகளை வாங்க மார்க்கெட்களில் வழக்கம்போல் மக்கள் திரண்டனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்தில் மூக்கு, வாயை முழுமையாக மூடும்வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். ஊரடங்கின் 2-வது நாளில் காலையில் சாலைகளில் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பார்க்க முடிந்தது. பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள போலீஸார் ஆங்காங்கே இந்த வாகனங்களை நிறுத்தி, தேவையின்றி செல்வோரை எச்சரித்து அனுப்பினர்.

மாநகர பகுதியில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் ஊர்சுற்றியதாக மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

பாளையங்கோட்டை மார்க்கெட்டிலுள்ள காய்கறி சில்லறை விற்பனை கடைகளை இடமாற்றம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பலசரக்கு, பேக்கரி, ஜவுளி, இறைச்சி கடைகள் என்று 540 கடைகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக காய்கறி, பழங்கள், பலசரக்கு, இறைச்சி கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இங்கிருக்கும் 170 காய்கறி கடைகளில் 100 கடைகள் திருச்செந்தூர் சாலையிலுள்ள பழைய காவலர் குடியிருப்பு வளாக பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த கடைகளில் காய்கறிகளை வாங்க நேற்று காலையில் கூட்டம் காணப்பட்டது. மீதமுள்ள 70 கடைகளை மாவட்ட நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி அருகேயுள்ள வளாகத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டி ருக்கின்றன.

பேருந்து போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால், வண்ணார்பேட்டை, தாமிரபரணி மற்றும் வி.எம்.சத்திரம் உள்ளிட்ட அனைத்து பணிமனைகளிலும் அரசு பேருந்துகள் ஓய்வெடுக்கின்றன. அரசு பணியாளர்களுக்காக மட்டும் ஒன்றிரண்டு பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

திசையன்விளை

திசையன்விளையில் மீன் மார்க்கெட்டில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளியின்றி அங்கு மக்கள் திரண்டதால் கரோனா தொற்று பரவ வாய்ப்பு உருவானது.

இங்கு கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது இந்த மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ததுபோல் இம்முறையும் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புளியரை

தென்காசி மாவட்டம் புளியரையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்கவில்லை. இருமாநில எல்லையிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இ-பாஸ் இல்லாமல் கேரளத்திலிருந்து வந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதேநேரத்தில் மருந்து, பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x