Published : 09 May 2021 03:16 AM
Last Updated : 09 May 2021 03:16 AM
தமிழக அரசின் அறிவிப்பின்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெண்களுக்கான கட்டணம் வசூலிக்காத 227 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 5 முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதில், முக்கியமாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என உத்தரவிட்டார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையொட்டி, அரசுப் போக்கு வரத்துக் கழகங்களில் ‘ஒயிட் போர்டு’ வழித்தட பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும், மற்ற வழித்தடங்களில் கட்டணம் இல்லாமல் செல்ல முடியாது என அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘ஒயிட் போர்டு’ பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்ற ஸ்டிக்கர் நேற்று முன்தினம் இரவே ஒட்டப்பட்டது. அரசின் புதிய அறிவிப்பால் மகளிர் மற்றும் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் என அனைத்து பெண்களும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து வேலூர் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து பணிமனைகளில் இலவச பயணம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 227 அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். வேலூரில் இருந்து ஆற்காடு, வாலாஜா, லத்தேரி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, கணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் நேற்று டிக்கெட் வாங்காமல் பயணம் செய்தனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்தனர்.
இது தொடர்பாக வேலூர் வெல்மா அங்காடியில் பணியாற்றும் லட்சுமி என்பவர் கூறும்போது, ‘‘கண்ணமங்கலத்தில் இருந்து வேலூருக்கு பணிக்காக தினசரி வந்து செல்ல குறைந்த பட்சம் 54 ரூபாய் செலவானது. இப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதால் மாதத்துக்கு 1,300 ரூபாய் வரை எனக்கு மிச்சமாகிறது. இது எனது குடும்பத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரி கள் கூறும்போது, ‘‘அரசு அறிவிப்பின்படி ‘ஒயிட் போர்டு’ அரசுப் பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். தற்போது, கரோனா தொற்று பரவல் காரணமாக பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதனால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 50 சதவீத எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படு கின்றன. பெண்களிடம் டிக்கெட் வசூலிக்கக்கூடாது என்பது குறித்த அறிவிப்பு பேருந்து நடத்துநர் களுக்கு தெளிவான அறிவுரைக ளுடன் கூறியுள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT