Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM
மெக்கானிக் கடைகள், உதிரிபாகங்கள் விற்பனையகம், பஞ்சர் ஒட்டும்கடைகள் மூடப்பட்டதால் வாகனஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த கடைகளுக்கு தளர்வுகள் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இரவு நேர முழுஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கடந்த 6-ம் தேதிமுதல் மளிகை, காய்கறி கடைகள்மட்டும் மதியம் 12 மணி வரைசெயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதர கடைகள் அனைத்தையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டீக்கடைகள் மதியம் 12 மணிவரை செயல்படவும், உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பாலகங்கள் மட்டும் வழக்கம்போல் செயல்படுகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மெக்கானிக் கடைகள்,வாகன உதிரிபாக விற்பனையகங்கள், பஞ்சர் ஒட்டும் கடைகள்மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுவருகிறது. இதனால் இந்த கடைகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள்எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “வாகனங்களில் வேலைக்கு செல்லும் போது, திடீரென வாகனம் பழுதடைந்தாலும், பஞ்சர் ஆனாலும் அதனை சரி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த பகுதிக்கு அருகில் இருக்கும் மெக்கானிக் யார் என்பதை விசாரித்து, அவரது தொலைபேசி எண்ணை பெற்று தொடர்புகொண்டு, நேரில் அழைத்து தான் சரிசெய்ய வேண்டியுள்ளது. இதனால்,மெக்கானிக்குகளுக்கு கூடுதல்தொகை கொடுக்க வேண்டியுள்ளது. அவசர தேவைக்கு மெக்கானிக் கிடைக்காவிட்டால் அன்றைய பொழுது வீணாகிவிடுகிறது.
வாகனத்தில் ஏதேனும் உதிரி பாகங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவற்றை வாங்க முடியவில்லை. இதனால் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலை பல்வேறு இடங்களில் ஏற்படுகிறது. எனவே, மெக்கானிக் கடைகள், இருசக்கர வாகன உதிரிபாக விற்பனையகங்கள், பஞ்சர் ஒட்டும் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்றனர்.
வாகனத்தில் ஏதேனும் உதிரி பாகங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவற்றை வாங்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT