Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
விழுப்புரத்தில் அதிக பயணிகளை ஏற்றிய 2 தனியார் பேருந்துகள், 3 ஷேர் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆட்டோக்களில்
2 பேரும், ஷேர் ஆட்டோக்களில் 4 பேரும், வாடகை கார்களில் 3 பேரும் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது.
இந்த கட்டுப்பாட்டின்படி விழுப்புரத்தில் வாகனங்கள் முறையாக இயக்கப்படுகிறதா? என்று நேற்று விழுப்புரம் - செஞ்சி சாலையில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து அனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் அவர்கள் நின்று கொண்டு பயணம் செய்ததை கண்டறிந்தனர்.
அந்த பேருந்துக்கு ரூ.1,200 அபராதம் விதித்தனர். அதுபோல் விழுப்புரத்தில் இருந்து திருவாமாத்தூருக்கு புறப்பட்ட ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் 10பயணிகள் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரோனா பாதுகாப்பு விதியை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த 2 ஷேர் ஆட்டோக்களுக்கு தலா ரூ.500, கடலூரில் இருந்து விழுப்புரம் வந்த தனியார் பேருந்துக்கு ரூ.1,200-ம் அபராதமாக விதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT