Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM
மொடக்குறிச்சி தொகுதியில் செல்லாத தபால் வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக சார்பில் முதல்முறையாக போட்டியிட்ட சி.சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிருத்தி, 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டு, அதன் மூலம் நாடு தழுவிய தேர்தல் சீர்திருத்தம் ஏற்பட காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதி இருந்தது. தற்போது நடந்த தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில், மருத்துவர் சி.சரஸ்வதியும் போட்டியிட்டனர்.
மத்திய, மாநில அமைச்சர் பதவிகளை வகித்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவின் மூத்த நிர்வாகி. அவரை எதிர்த்து பாஜக சார்பில் புதுமுக வேட்பாளராக மருத்துவர் சி.சரஸ்வதி நிறுத்தப்பட்டார். உட்கட்சியில் அதிருப்தி, கோஷ்டி மோதல் காரணங்களால், திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் பின் தங்கிய நிலையில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவும், கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றினர்.
இதன் பலன் வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவந்தது. தொடக்கத்தில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் முன்னிலை பெற்றாலும், சில சுற்றுகளுக்குப் பிறகு பாஜக வேட்பாளர் சரஸ்வதி முன்னிலை பெறத் தொடங்கினார். அடுத்தடுத்து ஒவ்வொரு சுற்றிலும், இரண்டாயிரம் வாக்குகளுக்குள்ளாக இரு வேட்பாளர்களிடையே வித்தியாசம் இருந்த நிலையில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆயுதமாக தபால் வாக்குகள் மாறின.
மொடக்குறிச்சி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மொத்தம் பதிவான 1,82,446 வாக்குகளில் பாஜ வேட்பாளர் 77,653 வாக்குகளும், தி.மு.க., வேட்பாளர் 76,409 வாக்குகளும் பெற்ற நிலையில், பாஜ வேட்பாளர் 1244 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
இந்த நிலையில் மொத்தம் பதிவான தபால் வாக்குகளில், திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 1435 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி 472 வாக்குகளும் பெற்றனர். தபால் வாக்குகளில் 589 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதன்படி, பாஜக வேட்பாளர் சி.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
செல்லாது என அறிவிக்கப்பட்ட வாக்குகளைக் காட்டிலும், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால், செல்லாததாக அறிவிக்கப்பட்ட 589 வாக்குகளைச் சரிபார்க்க திமுக வேட்பாளர் வற்புறுத்தினார். இதனால், நான்கு முறை அவை எண்ணி சரிபார்க்கப்பட்டன. இதனால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியானது. இதன்படி பாஜக வேட்பாளர் சரஸ்வதி 78,125 வாக்குகளும், தி.மு.க., வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,844 வாக்குகளும் பெற்று, 281 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT