Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

அமைச்சர், முன்னாள் அமைச்சர் உட்பட - தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் 5 பேரும் தோல்வி : வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட அமமுக, சுயேச்சை

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 2016-ல்எம்எல்ஏக்களாக வெற்றிபெற்ற 5 பேரும் தற்போது தோல்வியடைந்தனர்.

கடையநல்லூரில் முஸ்லிம் லீக் வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி முன்னிலையில் இருந்தார். இறுதியில்24,349 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றிபெற்றார். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே முஹம்மது அபூபக்கர் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளார். அத்துடன், திமுகவில் இருந்து விலகி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட அய்யாத்துரை பாண்டியன், திமுக கூட்டணிக்கு கிடைக்கவேண்டிய வாக்குகளை அதிகஅளவில் பிரித்துள்ளார். திமுக கூட்டணியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததும் முஹம்மது அபூபக்கர் தோல்விக்கு காரணமாகியது.

32 ஆண்டுக்குப்பின் வெற்றி

சங்கரன்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் என்பதால், அதிமுக வேட்பாளர் வி.எம்.ராஜலெட்சுமி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே ஈ.ராஜா கூடுதல் வாக்குகளை பெற்று வந்தார். இறுதியில் வி.எம்.ராஜலெட்சுமி தோல்வியைத் தழுவினார். அமமுக வேட்பாளர் அண்ணாதுரை பெற்ற 22,676 வாக்குகள் அதிமுக வெற்றியை பாதித்தன. அதிமுக கோட்டையாக இருந்தசங்கரன்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றிபெற்றுள்ளது.

பூங்கோதை அதிர்ச்சி

ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு கட்சிரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிக்கு 37,727 வாக்குகள் கிடைத்தன. தென்காசி மாவட்டத்தில் அதிமுக, திமுக கூட்டணி தவிர்த்து, பிற வேட்பாளர்கள் யாரும் இந்தஅளவுக்கு அதிகமான வாக்குகளை பெறவில்லை. சில சுற்றுகளில் இவர் இரண்டாம் இடத்துக்கு வந்து,பூங்கோதையை மூன்றாம் இடத்துக்கு தள்ளினார். வெற்றிபெற்றால் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பூங்கோதை அதிர்ச்சிதோல்வியைத் தழுவினார். அதிமுகவேட்பாளர் பால் மனோஜ்பாண்டியன் வெற்றிபெற்றார்.

கடைசியில் முந்தியது காங்.

தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கடைசி சுற்றுவரை முன்னிலையில் இருந்தார். ஆனால், தபால் வாக்கில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி முன்னிலை அடைந்தார். 370 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி வெற்றிபெற்றார். கடந்த 2016 தேர்தலில் குறைந்த வித்தியாசத்தில் செல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் தோல்வியடைந்த பழனி, இந்த முறை அவரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் முஹம்மது பெற்ற 9,944 வாக்குகள் அதிமுக தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

கடைசி நேர திருப்பம்

வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அ.மனோகரன் முன்னிலையில் இருந்துவந்தார். பாதிக்குமேற்பட்ட சுற்றுகளில் திடீரென மதிமுகவைச் சேர்ந்த சதன் திருமலைக்குமார் முன்னிலை பெறத் தொடங்கினார். அதன்பின், ஒரே சீராக முன்னேறி 2,367 வாக்குகள் வித்தியாசத்தில் சதன் திருமலைக்குமார் வெற்றிபெற்றார். இத்தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்கராஜ் 13,376 வாக்குகள் பெற்றதும் மனோகரன் எம்எல்ஏ தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x