Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஆக்ஸிஜன் வசதியுடன் 250 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியது:
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையான கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறுவங்கூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய் தொற்று ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆக்ஸிஜன் வசதி கொண்ட 250 படுக்கைகள், 175 சாதாரண படுக்கைகள், 25 வெண்டிலேட்டர்கள் வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தமாக 450 படுக்கை வசதிகள் உள்ளன. 6,000 கி.லி திரவ ஆக்ஸிஜன் மற்றும் 127 ஆக்ஸிஜன் உருளைகளும் கையிருப்பில் உள்ளன.
மேலும், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் மற்றும் சின்னசேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 120 படுக்கை வசதிகளுடன் 56 ஆக்ஸிஜன் உருளை வசதிகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 2 தனியார் மருத்துவ மனைகளில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை பிரிவு மையங்களும் தயார் நிலையில் உள்ளது.
சின்னசேலம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அயன்வேலூர் மாதிரி பள்ளி, அ.குமாரமங்களம் மாதிரி பள்ளி மற்றும் ஜி.அரியூர் மாதிரி பள்ளி ஆகிய பகுதிகளில் 670 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சமூக பொறுப்பு ணர்வுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
ஆக்ஸிஜன் வசதி கொண்ட 250 படுக்கைகள், 175 சாதாரண படுக்கைகள், 25 வெண்டிலேட்டர்கள் வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் என மொத்தமாக 450 படுக்கை வசதிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT