Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 200 பேர் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கரோனா முதல் அலையின்போது குமாரபாளையத்தில் சித்த மருத்துவ சிறப்புசிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட அரசு சித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், கரோனா முதல் அலையின்போது குமாரபாளையம் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 192 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் 192 பேரும் குணமடைந்தனர், என்றார்.
சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜி.செல்வமூர்த்தி கூறுகையில், கடந்த முறை சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால், மாவட்டத்திற்கு 500 முதல் 1,000 கிலோ வரை கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டன. தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும், சித்த மருத்துவர்கள் காலிப்பணியிடம் இருப்பதால் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படாமல் உள்ளது, என்றார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் போதியளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. அதேவேளையில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT