Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் - நெல் மூட்டைகள் கொள்முதல் மீண்டும் தொடங்கியது :

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு வந்த வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

தி.மலை மாவட்டத்தில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி மற்றும் ஆரணியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்தன.

இதில், சேத்துப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல் மூட்டை கள் வந்ததால் சுமார் 40 ஆயிரம் மூட்டைகள் குவிந்தன. ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள 8 கிடங்குகளும் நிரம்பியதால், களத்தில் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக, சேத்துப் பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நெல் கடந்த 19-ம் தேதி வரை கொண்டு வர வேண்டாம் என நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனால், கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

இதையடுத்து தடை உத்தரவு முடிவடைந்ததால், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிந்தன. லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். சுமார் 4 ஆயிரம் நெல் மூட்டைகளை நிர்வாகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x