Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM

தென்காசி மாவட்டத்தில் 27,000 டன் நெல் நேரடி கொள்முதல் :

புளியரை நெல் கொள்முதல் நிலையம் அருகே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள். (கோப்புப் படம்)

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து இந்த ஆண்டு நேரடியாக 27,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 5,000 டன் கூடுதல் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நெல் மட்டும் சுமார் 45,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் குற்றச்சாட்டு

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்அறுவடை முடிந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “அறுவடைக் காலம்தொடங்கியபோது, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. நெல்லை பதர் இல்லாமல் தூற்றி, காய வைத்து வழங்க வேண்டும் என்று கூறினார்கள். அதன்படி விவசாயிகளும் நெல்லை வழங்கினர். ஒரே நேரத்தில் அறுவடை நடந்ததால் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் குவிந்தன. நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகள் பல நாட்கள் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை குவித்து வைத்து காத்துக் கிடந்தனர்.

அறுவடைக் காலம் முடிந்து பல நாட்களாகியும் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளிடம் இருந்து நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி இருப்பு வைத்தவியாபாரிகள் தற்போது கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து நெல்லை தூற்றாமல் அப்படியே கொள்முதல் செய்கின்றனர்” என்றனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தென்காசி மாவட்டத்தில் 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதுவரை 27,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 5 ,000 டன் கூடுதலாகும்.

ஒரே நேரத்தில் அறுவடை நடந்ததால் பெரும்பாலான விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையத்தில் இருந்தும் ஆயிரம் மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் அனைவராலும் அறுவடை செய்த நாளிலேயே கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது இயலாது. அதனால் பெரும்பாலான விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவராமல் வீடுகளுக்கு கொண்டுசென்று நெல்லை இருப்பு வைத்தனர். அவர்கள் வசதிக்காக நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தான் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, கொள்முதல் நிலையங்களால் வியாபாரிகள் பயனடைவதாகக் கூறுவது தவறானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x