Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
தூத்துக்குடி/திருநெல்வேலி/தென்காசி
கரோனா பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு இன்று (ஏப்.20) முதல் அமலுக்கு வரவுள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்தை இரவு 8 மணியோடு நிறுத்த போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.இதனால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இன்று(ஏப்.20) தொடங்கி, இரவு 10 மணி முதல்அதிகாலை 4 மணி வரை ஊரடங்குஅமல்படுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.
நீண்ட தூர பேருந்துகள்
பொதுவாக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நீண்ட தூரம்செல்லக்கூடிய பேருந்துகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன.அதற்கு பதிலாக பகல் நேரத்தில் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இரவு 8 மணிக்குள் குறிப்பிட்ட ஊரை சென்றடையும் வகையில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட அனைத்து பேருந்துகளும், அந்தந்த ஊர்களில் இருந்து இன்று (ஏப்.20) காலையில் உடனடியாக புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று இரவுக்குள் வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திருச்செந்தூர்- சென்னை, திருச்செந்தூர்- கோவை, திருச்செந்தூர்- திருப்பூர், தூத்துக்குடி- சென்னை, தூத்துக்குடி- ஓசூர், தூத்துக்குடி- திருப்பூர், தூத்துக்குடி- கோவை ஆகிய வழித்தடங்களில் பகல் நேரத்தில் முதல்கட்டமாக 9 பேருந்துளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வருகை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர் பேருந்துகள்
இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 303 அரசு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இரவு 8 மணிக்குள் 280 பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.மேலும், பொதுமக்கள் 8 மணிக்கு பிறகு வந்து ஊருக்கு செல்வதற்கு பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையங்களில் தவிக்கும் நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் ஒவ்வொரு ஊருக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும் நேரம் குறித்த டிஜிட்டல் போர்டு போக்குவரத்து கழகம் சார்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்படும் நேரத்துக்கு பிறகுபேருந்துகள் இயக்கப்படாது.
எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்காசி
தென்காசியில் இருந்து திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவிலுக்கு காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும். தென்காசியில் இருந்து மதுரைக்கு காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்கு வரத்துக் கழக பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.பொதுமேலாளர் அறிக்கை
திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இரவுநேர முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் இயக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயக்கப்படும். திருநெல்வேலியிலிருந்து மதுரை வரை இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் காலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே இயக்கப்படும். தொலைதூர இடங்களுக்கு பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT