Published : 14 Apr 2021 03:14 AM
Last Updated : 14 Apr 2021 03:14 AM

யுகாதி பண்டிகையை முன்னிட்டு : சேலத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை :

யுகாதி பண்டிகையையொட்டி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: யுகாதியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை தமிழகத்தில் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் ஆண்டு தோறும் வீடுகளில் பூஜை செய்து கொண்டாடுவது வழக்கம். நேற்று யுகாதியை முன்னிட்டு வீடுகளில் கவுரி விரதத்தை பெண்கள் கடைப்பிடித்து, பஞ்சாங்கம் வைத்தும், கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உரைப்பு, இனிப்பு உள்ளிட்ட அறுசுவை பட்சணங்களை சுவாமிக்கு படையல் வைத்து வழிபட்டனர்.

இதையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. சேலம் கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. அதேபோல, சேலம் லட்சுமிநாராயண சுவாமி கோயில், வேணுகோபால சுவாமி கோயில், பிரசன்னவெங்கடாஜலபதி கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x