Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில், முகவர்களின் விவரங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

நாமக்கல்

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா. மெகராஜ் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு விவே கானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் கதவுகளை சுற்றிலும் 3 அடி அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அறைகளின் வாயிலில் ஆயுதம் ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், எல்லை பாதுகாப்பு படை, தமிழக சிறப்பு காவல் படை, மாவட்ட காவல் துறையினர் ஆகியோர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், கேமராக்கள் பொருத்தப்பட்டு நிகழ்வுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது. இதுபோல் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் களின் முகவர்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பதை ஆட்சியர் உறுதி செய்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணிகளை உறுதி செய்ய வருகை தந்த வேட்பாளர் களின் முகவர்களின் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x