Published : 10 Apr 2021 03:14 AM
Last Updated : 10 Apr 2021 03:14 AM
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்த்திட வேண்டும். வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்று (10-ம் தேதி) முதல் தடை விதிக்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கைசுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். வணிக நிறுவனங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கக் கூடாது. இந்த விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு கடைபிடிக்காத கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் பச்சைமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT