Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/நாகர்கோவில்
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 79 பேர், தென்காசி மாவட்டத்தில் வங்கி மேலாளர் உட்பட 45 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை செந்தமிழ்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 79 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் திருநெல்வேலி மாநகரில் மட்டும் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வட்டாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
மானூர்- 3, நாங்குநேரி- 1, பாளையங்கோட்டை- 10, பாப்பாக்குடி- 1, ராதாபுரம்- 3, வள்ளியூர்- 6, களக்காடு- 2.
திருநெல்வேலி மாநகரில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் பேட்டை செந்தமிழ்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேற்றுமுன்தினம் தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், சுகாதரப் பணியாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தற்போது வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது வீட்டை சுற்றி மாநகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
பாளையங்கோட்டை பகுதிகளில் உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகப்ரியா, அதிகாரிகள் சீதா லட்சுமி, அருள் செல்வன், கண்ணன் உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி
மேலும் தேர்தலில் வாக்குச் சாவடி முகவராக செயல்பட்ட ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. இதை யடுத்து அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவரது மனைவி, தாய், மகன் ஆகியோருக்கு பாதிப்பு உறுதியானது.
தூத்துக்குடி
குமரியில் ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 72 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேகமாக தொற்று பரவுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 350-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 72 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங் களில் இருந்து கன்னியாகுமரிக்கு வருவோர் மூலம் கரோனா பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 700-க்கும் மேற்பட்டோரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் தொற்றின் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மேலும் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
கரோனாவை கட்டுப்படுத்த முகக் கவசமின்றி வெளியே செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT