Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
மனைவி இறந்த துக்கத்திலும், அவரது இறுதிச்சடங்குகளை முடித்துவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினைப் பதிவுசெய்த முதியவருக்கு பாராட்டு கள் குவிகிறது.
தேர்தல் நாளில் வாக்களிப்பது கட்டாயம் என்பதற்காக தேர்தல்ஆணையம் அனைத்து நிறுவனங் கள், கடைகள், உணவகங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தது.
வாக்காளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கும், சென்னை, கோவை போன்ற நகரங்களில் முதியவர் களுக்கு இலவச கால் டாக்சி சேவை போன்றவற்றை தேர்தல்ஆணையம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர், தனது மனைவி இறந்தநிலையிலும், இறுதி காரியங்களை முடித்து விட்டு, உடனடியாக வாக்குச்சாவடிக்கு சென்றுதனது வாக்கினைச் செலுத்தி ஜனநாயக்கடமையை ஆற்றியுள்ளார்.
ஈரோடு பெரியசேமூர் மல்லி நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (65).இவரது மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 2 வாரமாக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளம்மா, திங்கள்கிழமை இரவு இறந்தார். தேர்தல் வாக்குப்பதிவு நாளான செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் வெள்ளம்மாவின் உடல், அவரது கணவர் ராம தாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராமதாஸ், பகல் 12.30 மணி அளவில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மாவில் மனைவியின் ஈமச் சடங்குகளை முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, அடுத்த நிமிடமே ஈரோடு சி.என்.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து, வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து, தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதுகுறித்து ராமதாஸ் கூறும்போது, ‘என் மனைவி இறந்தது எனக்கு பெரிய துக்கம் என்றாலும், வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை அது யாருக்காகவும், விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். ராமதாஸின் இந்த செயல் பாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT