Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. வாக்குப்பதிவு காரணமாக நோய் தொற்று மேலும் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறையினர் தெரி வித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த 10 மாதங்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல குறைய தொடங்கியபிறகு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நோய் பரவல் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தற்போது தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் குறைவாக இருந்த பாதிப்பு ஏப்ரல் மாதம் தினசரி 3 ஆயிரத்தை கடந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்டவைகளை நடத்தி வந்ததால் கரோனா பரவல் அதிகரித் துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கவும், நோய் தடுப்புக்கான பணிகளை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத் துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல் வேறு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகமாகி கொண்டே வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் 10-க்கும் குறைவான நபர்களுக்கே நோய் தொற்று கண்டறியப்பட்டது. தினசரி 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இது தவிர வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அமைக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி களிலும் கரோனா விதி முறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டன.
இருந்தாலும், வாக்குப்பதிவு காரணமாக கரோனா பாதிப்பு அதிக நபர்களுக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 2 நாட்களில் கரோனா பாதிப்பு குறித்து முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று கரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். வெளியே வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதேபோல, ரயில், பேருந்து போன்றவை களில் பயணம் செய்ய நேரிட்டால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT