Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் 25, திண்டிவனம் 15, மயிலம் 14, விக்கிரவாண்டி 14, திருக்கோவிலூர் தொகுதியில் 14, செஞ்சி 13, வானூர் தொகுதியில் 7 வேட்பாளர்கள் என மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்றது. தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 2 பேர் வீதம் மொத்தமுள்ள 2,368 வாக்குச்சாவடி மையங்களில் 4,736 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க வந்த பொதுமக்களை அங்குள்ள நுழைவுவாயில் முன்புநிறுத்தி தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் உடல்வெப்ப நிலையைபரிசோதித்த பிறகே வாக்குச்சாவடியின் வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர். முக்கியமாக முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமேவாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். கையுறை வழங்கப்பட்டது. அந்த கையுறையை அணிந்தே வாக்களிக்கச் சென்றனர். ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வ முடன்வாக்களித்தனர். செஞ்சி சட்டமன்றதொகுதியில் 78.21 சதவீத வாக்குகளும், மயிலம் தொகுதியில் 79.05 சதவீத வாக்குகளும், திண்டிவனம் தொகுதியில் 78.36 சதவீத வாக்குகளும், வானூர் தொகுதியில் 79.24 சதவீத வாக்குகளும், விழுப்புரம் தொகுதியில் 76.94 சதவீத வாக்குகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீத வாக்கு களும், திருக்கோவிலூர் தொகுதியில் 76.03 சதவீத வாக்குகளும் பதிவானது.
அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபாட் கருவிகள் அனைத்தும் இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டு அந்த பெட்டிகளுக்கு தேர்தல் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்குள்ள அறைகளில் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த அறையை தேர்தல் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுலரான ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திரு வெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தி எடையார், மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர், விக்கிரவாண்டி அருகே வி அகரம், காணை, செஞ்சி அருகே மழவந்தாங்கல், விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT