Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
மத்திய பாஜக அரசு தன்னிடம் உள்ள அதிகார மையங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை சீரழிக்கிறது, என காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார்.
ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெராவை ஆதரித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது:
கடந்த தேர்தல்களில் ‘மோடியா, லேடியா’ என ஜெயலலிதா சவால் விடுத்தார். தமிழகத்தின் சுயமரியாதையைக் காப்பாற்றிய ஜெயலலிதாவின் வழி வந்தவர்கள் எனச் சொல்லும், முதல்வரும், துணை முதல்வரும் மோடியிடம் சரணாகதி அடைந்துள்ளனர். தமிழர்களின் சுயமரியாதை பறிக்கப்பட்டுள்ளது. பாஜகவோடு கைகோர்த்து கொண்டு இருக்கும் முதல்வர், துணை முதல்வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
எங்களைப் பொருத்தவரை அரசியலில் சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதனால்தான், எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர், அதில் கிடைக்கும் சம்பளத்தை தவிர வேறு லஞ்சம் வாங்க மாட்டேன் என திருமகன் ஈவெரா பிரச்சாரத்தில் உறுதி அளித்து வருகிறார். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் தொடரும் அதிமுக ஆட்சியை மாற்ற வேண்டுமென தமிழக மக்கள் விரும்புகின்றனர். அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை.
இது இயற்கையான கூட்டணி அல்ல. கடந்த மக்களவைத் தேர்தலைப் போல், இந்த தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். 180-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும்.
மத்திய பாஜக அரசு தன்னிடம் உள்ள அதிகார மையங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை சீரழிக்கிறது. எதிர்கட்சிகளை அழிக்கப் பார்க்கிறது. பாசிச மனப்பான்மையோடு, இந்த நாட்டை பாஜக வழிநடத்தப் பார்க்கிறது.
இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு, தேர்தல் நடந்து கொண்டு இருக்கும்போது, திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை மேற் கொள்ளப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்கட்சிகளை அழித்து, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற சிந்தனையைக் கொண்டு வர பாஜக நினைக்கிறது. பாசிச பாஜகவை புறக்கணித்து, ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டியாக புதியதாக பொறுப்பேற்கவுள்ள தமிழக அரசு இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT