Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM

நெல்லையில் அமித்ஷா பிரச்சாரத்தால் பாஜக உற்சாகம் :

திருநெல்வேலி

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது திருநெல்வேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியது பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சிகாக திருநெல்வேலி வண்ணார்பேட்டை வடக்குபுறவழிச்சாலையில் தச்சநல்லூர் அருகேயுள்ள திடலில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார்நாகேந்திரன், நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் கணேசராஜா ஆகியோருக்கு ஆதரவு கேட்டு அமித்ஷா பேசினார். பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம் ஆகிய தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் ஜெரால்டு, இசக்கிசுப்பையா, இன்பதுரை ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் மூவரும் வரவில்லை.

பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் சுதாகர்ரெட்டி, மும்பையை சேர்ந்த பாஜக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், இலகணேசன், அதிமுக நிர்வாகிகள் சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்று பேசினர். திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் வரவேற்றார்.

அமித்ஷா ஹிந்தியில் உத்வேகத்துடன் பேசியபேச்சு பொதுக்கூட்ட பந்தலில் இருந்த பாஜக, விஷ்வஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தவர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியது. பாரத் மாதாகி ஜே என்று உரக்கத் தெரிவித்து அவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

தனதுபேச்சில் அமித்ஷா 4 ஜி, 3 ஜி என்று சுவராஸ்யமாக சிலவற்றை எடுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, ராகுல்காந்தி என்று 4 ஜிக்கள் வழிவழியாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதுபோல் தமிழகத்தில் திமுகவில் கருணாநிதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று 3 ஜிக்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்த வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமியக் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் பல்வேறு கட்சி தலைவர்களையும் வரவேற்று பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதுபோல், அமித்ஷாவை வரவேற்றும் தமிழில் இசையமைக்கப்பட்ட பாடல் அவ்வப்போது ஒலிக்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரில் 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்த வடக்கு புறவழிச்சாலை நேற்று முன்தினம் முதலே போலீஸாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்தது.

நேற்று காலை 10 மணி முதல் வண்ணார்பேட்டையிலிருந்து தச்சநல்லூர் வரையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதுபோல் வண்ணார் பேட்டை ரவுண்டானாவிலிருந்து பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x