Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM

நெல்லை மாவட்டத்தில் - தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு 3-ம் கட்ட பயிற்சி : வாக்குச் சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரம்

வாக்குச் சாவடி அமைந்துள்ள பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளி பகுதியில் 100 மீட்டர் தொலைவை அடையாளப்படுத்தும் விதமாக கோடு வரையப்பட்டுள்ளது.படம்: அ.அருள்தாசன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள திருநெல் வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக மொத்தம் 1,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் என்று கோடுகள் வரையப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த தொலைவுக்குள் செல்ல வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் கட்சியின ருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.

மாவட்டத்தில் தேர்தல் பணியில் 9,236 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அவர்களுக்கு 3-ம் கட்டமாக கூடுதல் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.

ஏற்கெனவே அந்தந்த தொகுதி வாரியாக தனித்தனியாக 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 5 தொகுதிகளிலும் நேற்று கூடுதல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வண்ணார்பேட்டை எப்எக்ஸ் சிபிஎஸ்இ பள்ளி வளாகத்தில் பாளையங்கோட்டை சட்டப் பேரவை தொகுதிக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தொகுதி தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜி. கண்ணன் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர் களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். பாளையங்கோட்டை வட்டாட்சியர் செல்வம், கண்காணிப்பாளர் காசி, மேலப் பாளையம் மண்டல சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது உள்ளி ட்டோர் பயிற்சி அளித்தனர். தபால் வாக்கு படிவம் பெறாதவர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டன.

பயிற்சியில் பங்கேற்று முடித்துள்ளவர்களுக்கு நாளை (5-ம் தேதி) பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. அதை பெற்றுக் கொண்ட பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு அவர்கள் செல்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x