Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

புறநகர் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களால் - போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிய ஈரோடு :

ஈரோடு

ஈரோடு புறநகர் பகுதிகளிலேயே பிரதான கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால், ஈரோடு நகரம் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து தப்பியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது திரளும் தொண்டர்களால், அந்தந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கை. ஆனால், இம்முறை இதனைத் தவிர்க்கும் வகையில், தேர்தல் ஆணையம் பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களை வரையறை செய்து, அங்கு மட்டும் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த 83 இடங்களில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் காலங்களில் திமுக பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஈரோடு நகரின் மையத்தில் உள்ள வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடப்பது வழக்கமாக இருந்தது.

கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது, ஈரோடு நேதாஜி காய்கறிச்சந்தையின் கடைகள், பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்னர் வ.உ.சி.பூங்கா மைதானத்திற்கு இடம் பெயர்ந்தன. வழக்கமாக பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் தற்போது காய்கறிச் சந்தை இயங்குவதால், அங்கு இந்த ஆண்டு கூட்டம் நடக்கவில்லை.

ஈரோடு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திமுக தலைவர் ஸ்டாலின் புறநகரில் உள்ள சித்தோடு பகுதியிலும், கோபியிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். பெருந்துறையை அடுத்த சரளை பகுதியில் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசிச் சென்றுள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார கூட்டமும், புறநகர் பகுதியான சித்தோட்டில் நடந்தது. அமமுக தலைவர் டிடிவி தினகரன் புறநகரான நசியனூரிலும், நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் சோலாரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் விதிவிலக்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மட்டும் நகரின் மையத்தில் உள்ள திருநகர்காலனியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், உதயநிதி உள்ளிட்டோர் மேற்கொண்ட வேன் பிரச்சாரமும் போக்குவரத்துக்கு பாதிப்பின்றி நடந்து முடிந்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு நகரில் 9 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மக்கள் நீதி மய்யம், திராவிடர் கழகம் ஆகியோர் மட்டுமே நகரப்பகுதியில் கூட்டத்தை நடத்தினர்.

நகரப்பகுதியில் கூட்டம் நடத்தினால், வாகனங்களில் ஆட்களை அழைத்து வருதல், வாகனங்களை நிறுத்துதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படும். இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, அவர்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வரும் என்பதால், அரசியல் கட்சியினரே நகரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதைத் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஈரோடு நகர போக்குவரத்திலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படுத்தாமல் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இம்முறை நடந்து முடிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x