Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படை போன்ற கண்காணிப்புக் குழுவினர் சுங்கச்சாவடி அருகிலேயே வாகனத் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் வாகனங்கள் ஒன்றை ஒன்று மோதி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுகிறது.
பறக்கும்படையில் ஒரு வட்டாட்சியர் அல்லது ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவரும் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் உள்ளனர். ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 குழுக்கள் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் 24 மணி நேரம் செயல்படத்தக்க வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம், மது பானங்கள் மற்றும் இதர பரிசுப் பொருட்கள் வழங்குதல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற புகார் வந்தால், நேரில் சென்று புகாரின் மீது உண்மைத்தன்மை இருப்பின் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி சுங்கச் சாவடிகளில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சுங்கச் சாவடி அருகிலேயே வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள், தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் சற்று தொலைவில் வாகனத் தணிக்கை நடத்தலாமே என ஒரு வாகன ஓட்டி பறக்கும் படை அலுவலரிடம் தெரிவித்தார். அதற்கு பணியிலிருந்த அலுவலரோ சற்று தொலைவில் நின்று தணிக்கை செய்தால் எந்த வாகனமும் நிறுத்துவதில்லை என பதிலளித்தார்.
இதையடுத்து சில வாகன ஓட்டிகள் உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செல்போன் வாயிலாக பேசி, வாகனங்களை விபத்து அபாயம் இருப்பதால், விபத்து ஏற்படாத வகையில் தணிக்கை செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT