Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சார்பில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்குத் தொகுதி வேட்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்து கூட்டமைப்பு தலைவர் டி.ஜெகதீசன் பேசியதாவது:
ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தில் 1,280 தொழில்முனைவோரும், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் 90 அமைப்புகளைச் சேர்ந்த 15 ஆயிரம் தொழில்முனைவோர்களும் உள்ளனர். இவர்களுக்கு தொழில் ரீதியாக ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்னைகளை வேட்பாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, என்றார்.
கூட்டத்தில் ஈரோடு கிழக்குத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசும்ப்போது, இங்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து திட்டமிடப்படும். தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க மாதம்தோறும் வணிகர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும் என்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்.யுவராஜா பேசும்போது, தொழில்துறையில் ஏற்படும் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணுவதை விடுத்து தொழிற்சாலைகளை மூடுவது தவறானதாகும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் காப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஈரோடு நகரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுக்க தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் வர்த்தகத்தில் உள்ள பிரச்சினைகளை தொடர் சந்திப்புகள் மூலம் தீர்வு காண நடவடிக்கையெடுப்பேன் என்றார்.
ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி பேசும்போது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கியுள்ள ஈரோடு நகரை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் ஆலோசனை பெற்று, நகரை படிப்படியாக மேம்படுத்துவோம். சாயக்கழிவு பிரச்னை போன்ற நீண்டகால பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.
ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பேசும்போது, அதிமுகவை பொறுத்தவரை விவசாயத்தையும், தொழிலையும் இரண்டு கண்களாக பார்க்கிறது. வணிகர்கள் கோரிக்கைகளை எப்போது வேண்டுமானும் எங்களிடம் தெரிவிக்கலாம். ஈரோடு நகரை பொறுத்தவரை வளர்ச்சிப் பணிகள் காரணமாக, சாலைகள் மோசமாக உள்ளன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ஈரோடு நகரம் பெரு நகரங்களுக்கு இணையான கட்டமைப்பை பெறும் என்றார்.
இதேபோல் ஈரோடு கிழக்குத்தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.எம்.ஆர்.ராஜ்குமார் தனது வாக்குறுதிகளை கூட்டத்தில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT