Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM

வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு - கணினி குலுக்கல் முறையில் காவல்துறையினர் தேர்வு :

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினரை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.

நாமக்கல்

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் துறையினர், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி ராசிபுரம் (தனி) தொகுதியில் 112 வாக்குச்சாவடி மையங்களில் 332 வாக்குச்சாவடிகளும், சேந்தமங்கலம் (தனி) தொகுதியில் 342 வாக்குச்சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 377 வாக்குச்சாவடிகளும், பரமத்தி வேலூர் தொகுதியில் 317 வாக்குச்சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 691 வாக்குச்சாவடி மையங்களில் 2 ஆயிரத்து 49 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று இம்மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினரை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. சக்திகணேசன் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி ராசிபுரம் தொகுதிக்கு 112 காவல் துறையினரும், சேந்தமங்கலம் தொகுதிக்கு 129 போலீஸார், நாமக்கல் தொகுதிக்கு 137 போலீஸார், பரமத்தி வேலூரில் 127 போலீஸார், திருச்செங்கோடு தொகுதியில் 114 போலீஸார், குமாரபாளையம் தொகுதிக்கு 72 போலீஸார் என மொத்தம் 691 வாக்குச்சாவடி மையங்களில் 691 காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர், என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் திருமுருகன், சுப்பிரமணி, தேர்தல் பிரிவு கணினி பொறியாளர் சக்திவேல் உள்ளிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x