Published : 31 Mar 2021 03:16 AM
Last Updated : 31 Mar 2021 03:16 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடி மையங்களில் வரும் ஏப். 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றன.
இங்கு வரும் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்காக 11 வகையான கரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு மாவட்ட பொது சுகதாரத்துறையின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பு உபகரணங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமம் தனியார் கல்லூரி வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார்.
இத்தொகுப்பில் வெப்ப நிலைமானி - 1, மூன்றடுக்கு முகக்கவசங்கள் - 60, உடன் முககவசங்கள் - 10, கையுறைகள் - 30. 100 மி.லி கிருமி நாசினி திரவம் - 10, 500 மி.லி கிருமி நாசினி திரவம் - 6, வாக்காளர்களின் எண்ணிக்கைக்கேற்ப வாக்காளர் கையுறைகள், வாக்காளர் முகக் கவசங்கள் (தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வாக்காளர்களுக்காக)- 25, மஞ்சள் நிற கவர் பொருந்திய பச்சை நிற குப்பைத் தொட்டி - 5, தனி நபர் காப்பு உடை -12, உப்புக்கரைசல் - 5 ஆகியவை இடம் பெற்றுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர்கள் தேர்தல் நாளில் கரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கையாண்டு, தங்களுடைய ஜனநாயக கடமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண் குராலா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT