Published : 28 Mar 2021 03:19 AM
Last Updated : 28 Mar 2021 03:19 AM
பிரதமர் மோடியின் ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் தாரை வார்க்கப் பட்டுள்ளது என திருவண்ணா மலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலு குற்றஞ்சாட்டினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பொதுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “வேங்கிக்கால் நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும். அண்ணா நுழைவு வாயிலில் இருந்து வேங்கிக்கால் முழுவதும் மின் விளக்கு வசதி மற்றும் கால்வாய் வசதி செய்து தரப்படும். திமுகவை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. அவர்கள், எதைச் சொல்லி வாக்கு கேட்பார்கள்.
முன்னாள் பிரதமர் மன் மோகன்சிங் ஆட்சியில் ரூ.410-க்கு விற்பனை செய்யப்பட்ட காஸ் சிலிண்டர் விலை, தற்போது ரூ.950-க்கு விற்பனை செய்யப் படுகிறது. ரூ.70-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95-க்கும் மற்றும் ரூ.44-க்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் ரூ.86-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, தேர்தலுக்காக விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.12,500 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1.75 லட்சம் கோடியை எடுத்து செலவு செய்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள், தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளன. உங்களிடம் இருப்பது ஒரு வேல்தான். இங்கு வேலுவே வேட்பாளர்தான்” என்றார்.
இதில், மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் கம்பன், நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச்செல்வன், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்தையன், மதிமுக மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், மாநில மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் பாசறைபாபு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT