Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு நாளன்று கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இவற்றை சிப்பமிட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அந்தந்த தொகுதிகளுக்கு அணுப்பும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார் அப்போது அவர் கூறுகையில், கரோனா நோய்த்தொற்று பரவாத வகையில் பாதுகாப்பு உபகரணங்களான முகக் கவசங்கள், கரோனா பாதுகாப்பு கவச உடை, இன்ஃப்ரா ரெட் வெப்பமானி, முகதடுப்பான்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் ஒரு பெட்டியில் சிப்பமிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 2 நபர்கள் வீதம் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்பட்டு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்பணியில் ஈடுபடவுள்ளவர்களுக்கு சுகாதார துறையின் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இவர்கள் வாக்குசாவடிகளில் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை அளவீடு செய்து, கிருமி நாசினி கொண்டு கையை சுத்தம் செய்த பின்னர் ஒவ்வொருவருக்கும் கையுறைகள் கொடுத்து வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வாக்களிக்க அனுப்பி வைப்பர், என்றார்.
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.சோமசுந்தரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் வி.சி.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT