Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM
திமுக, அதிமுகவின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தற்போது நகைக்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக் கடன்கள், மகளிர் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய் வோம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் எதிரொலியாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன், நகைக் கடன், மகளிர்குழுக்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்பால் அதிகாரிகளால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதேநேரத்தில் அரசின் வாய்மொழி உத்தர வுக்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் பட்டியலை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, நகைக்கடன் தள்ளுபடியால் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்க அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அவசரத்தேவைகளுக்குக்கூட கடன்பெற முடியாமல் தவிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நகைக் கடன்களை ரத்துசெய்வதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், பொதுமக்களுக்கு, ரத்து செய்த இந்தத்தொகையை தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்குத் திருப்பித்தர 5 ஆண்டுகள் வரை ஆகும். அதுவும் சிறிது சிறிதாகத்தான் தருவர். இதனால், தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகளில் இருந்து நேரடியாக நிதி பெறும் மத்திய கூட்டுறவு வங்கிகள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், உறுப்பினர்களின் வைப்பீட்டுத் தொகையைக் கொண்டு நகைக் கடன் வழங்கும் கிராமப்புற வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசின் நகைக்கடன் ரத்து அறிவிப்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்கு கடன் ரத்து செய்து நகைகளை கொடுத்துவிடுவோம். ஆனால், இந்தத் தொகையை அரசு திருப்பித் தர தாமதமாவதால் உறுப்பினர்கள் வைப்பீடு செய்த தொகையைத் திருப்பிக் கேட்கும் போது கொடுக்க முடியாது. மேலும், நகைக்கடன் ரத்து எந்தத் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று தெளிவான விவரம் இல்லை. அதனால், தற்போது வைக்கப்படும் நகைக்கடனும் சேர்த்து ரத்து செய்யப்படலாம்.
அதனால், நிதியில்லாத கிராமப்புறவங்கிகளில் தற்காலிகமாகநகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைத்திருக்கலாம், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT