Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM
ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழுக் கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் வ.சித்தையன் தலைமையில் நடந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் ஏஐடியுசி மாநில நிர்வாகக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்ட முடிவுகளை விளக்கி ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. மாநிலச் சட்டங்களை ஒழித்து, நலவாரிய அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது.
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசவில்லை. வாரியங்களில் தொழிலாளர் பிரதிநிதிகள், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டும் நியமிக்கப்படுகின்றனர். இவற்றைத் தாண்டி எல்லா துறைகளிலும் மத்திய அரசு வடமாநிலத்தவர்களை நியமித்து வருகிறது.
எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக- அதிமுக கூட்டணியை வெற்றி பெற விடாமல் தடுக்கும் வகையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஏஐடியுசி ஆதரிக்கிறது. இதற்காக ஏஐடியுசி தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்தல் பணியாற்றுவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.எம்.கந்தசாமி, ஐ.ராசம்மாள், என்.கோவிந்தன் (கைத்தறி நெசவாளர் சங்கம்), எம்.பாபு, முசு.கிருஷ்ணமூர்த்தி, பி.ரவி (கட்டிடத் தொழிலாளர் சங்கம்), எஸ்.பெருமாள், ஏ.ஜீவானந்தம் (டாஸ்மாக் பணியாளர் சங்கம்) கே.எஸ்.நல்லசாமி, எஸ்.குணசேகரன் (ஆட்டோ தொழிலாளர் சங்கம்), மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கம், தோல்பதனிடும் தொழிலாளர் சங்கம், தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கம், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT