Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் களைகட்டும் பிரச்சாரம் :

சங்கராபுரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பாமக வேட்பாளர் ஜி.ராஜா.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் கள்ளக்குறிச்சி(தனி) என 4 தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்க 1,569 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் 17 வேட்பாளர்கள், சங்கராபுரம் தொகுதியில் 19 வேட்பாளர்கள், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் தலா 15 வேட்பாளர்கள் என மொத்தம் 66 பேர் களமிறங்கியுள்ளனர். இதில்பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த ஒரு வராமாகவே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி (தனி)த் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவேட்பாளர் எம்.செந்தில்குமாருக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில்போட்டியிடும் கே.ஐ.மணிரத்னத்துக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது

சங்கராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை திமுக வேட்பாளர் தா.உதயசூரியனுக்கும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் ஜி.ராஜாவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது

உளுந்தூர்பேட்டைத் தொகு தியில் திமுக வேட்பாளர் ஏ.ஜே.மணிக்கண்ணனுக்கும் அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுருவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ரிஷிவந்தியத்தில் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திக்கேயனுக்கும், அதிமுக வேட்பாளர் எஸ்.கே.சந்தோஷூக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

அதிமுக-திமுக நேரடி போட்டித் தொகுதிகளில் இரு கட்சிகளின் தொண்டர்கள் பலத்தால் வாக்கு சேகரிக்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. மேலும் இரு கட்சியினரும் ஆட்டம் பாட்டம் என வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்குகளை சேர்க்கின்றனர்.

இவர்களைத் தாண்டி மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கும் சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்ட பிரச்சார களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x