Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM
தேர்தல் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்கும் பணியை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேர்தல் சம்பந்தமான புகார்களை கண்காணிக்க 24 மணி நேரமும் அலுவலர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.
இதன்படி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படை மற்றும் நிலையான குழுக்கள் வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஒரு தொகுதிக்கு 1 குழு வீதம் 6 தொகுதிகளில் மொத்தம் 6 குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு வாகனம் எந்த இடத்தில் செல்கிறது என்பதை தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே கணினியின் உதவியுடன் கண்காணிக்கவும், வாகனத்தின் வேகத்தினை கண்காணிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா. மெகராஜ் நேரில் ஆ்ய்வு செய்தார். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சி-விஜில் செயலி மூலம் 77 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 15 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 62 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 12 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில், 6 புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT