Published : 16 Mar 2021 03:13 AM
Last Updated : 16 Mar 2021 03:13 AM

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்; வர்த்தகம் பாதிப்பு :

தருமபுரி / ஈரோடு / கிருஷ்ணகிரி

தேசியமய வங்கிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நேற்று தருமபுரி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

காப்பீட்டு நிறுவனங்கள், தேசிய மய வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், மக்கள் நலன் கருதி பொதுத் துறை நிறுவனங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய மய வங்கி ஊழியர்கள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசிய மய வங்கிகளின் 70 கிளைகளில் பணியாற்றும் 700 ஊழியர்கள் பங்கேற்றனர். மேலும், தருமபுரியில் பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளை முன்பு வங்கி ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டத்தால் நேற்று தருமபுரி மாவட்ட தேசிய மய வங்கிக் கிளைகளில் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும்(16-ம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க இருப்பதாக வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் பரிவர்த்தனை பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 217 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி கூறுகையில், ‘பொதுத்துறை வங்கிகள் வேலைநிறுத்தம் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றினால், சேவை அடிப்படையில் செயல்படும் வங்கிகளின் தன்மை மாறி, முழுமையாக கட்டண வங்கிகளாக செயல்படும். இதனால், மக்களும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் பெருமளவு பாதிக்கப்படுவர், என்றார்.

கிருஷ்ணகிரியில் போராட்டம்

கிருஷ்ணகிரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் சேகர், பொன் மகாராஜா, அசோக்குமார், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் ஜெகநாதன், இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் சந்துரு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத் தலைவர் ஹரிராவ் நிறைவுரை ஆற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x