Published : 16 Mar 2021 03:15 AM
Last Updated : 16 Mar 2021 03:15 AM

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அதிமுக-திமுக உள்ளிட்ட - 16 வேட்பாளர்கள் ஒரே நாளில் மனுத்தாக்கல் :

குடியாத்தம் (தனி) தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூரிடம் மனுத்தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பரிதா.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று அதிமுக, திமுக வேட் பாளர்கள் என மொத்தம் 16 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. வரும் 20-ம் தேதி மனுக்கள் மீது பரிசீலனையும், வரும் 22-ம் தேதி மனுக்களை திரும்பபெற கடைசி நாள். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படும்.

மனுத்தாக்கல் செய்ய குறைந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நல்ல நாள் என்பதாலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்தனர். ஒரு சிலர் மட்டும் நாளை (புதன் கிழமை) செய்ய உள்ளனர். நேற்று காலை 10.30-12 ராகு காலம் என்ப தால் பகல் 12 மணிக்குப் பிறகு மனுத்தாக்கல் செய்தனர்.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பகல் 12.30 மணியளவில் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக திமுக மாவட்டப் பொருளாளர் நரசிம்மன் மனுத்தாக்கல் செய்தார்.

அதிமுக வேட்பாளர் வி.ராமு ஓடைபிள்ளையார் கோயில் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்று காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் மனுத்தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருக்குமரன் மனுத்தாக்கல் செய்தார். காட்பாடி தொகுதியில் நேற்று 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.ஆர்.கே.அப்பு ஊர்வலமாகச் சென்று தேர்தல் அலுவலர் கணேஷிடம் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு, மாற்று வேட்பாளராக அதிமுக மாநகர் மாவட்டப் பொருளாளர் மூர்த்தி மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக, காமராஜர் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.மனோ கரன் மனுத்தாக்கல் செய்தார். வேலூர் தொகுதிக்கு நேற்று 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளராக ஏ.பி.நந்த குமார் நேற்று மனுத்தாக்கல் செய்தார். முன்னதாக அவர் அண்ணா சிலை, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றவர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கட் ராமனிடம் மனுத்தாக்கல் செய்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர் வேழலகன் ஊர்வலமாகச் சென்று மனுத்தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர் ராஜ்பாபு மனுத்தாக்கல் செய்தார். அணைக்கட்டு தொகுதி யில் நேற்று 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

கே.வி.குப்பம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் சீதாராமன், இவரது மனைவி தாமரை செல்வி மாற்று வேட்பாளராகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் பானுவிடம் மனுத்தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்ய ராணி என்பவருடன் சேர்த்து மொத்தம் 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

அதேபோல், குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக வேட் பாளர் பரிதா, பேரணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் மன்சூரிடம் மனுத்தாக்கல் செய்தார். பரிதாவின் மாற்று வேட்பாளராக ஜெ.காவியாவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலையேந்திரி என மொத்தம் 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 2 சுயேட்சை வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்த நிலையில் நேற்று ஒரே நாளில் 16 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x