Published : 14 Mar 2021 03:17 AM
Last Updated : 14 Mar 2021 03:17 AM

நெல்லை எழுச்சி தினத்தில் - வஉசி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு : சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் அதிருப்தி

திருநெல்வேலி

திருநெல்வேலியில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்த நிலையில், நெல்லை எழுச்சி தினத்தில் வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தன்னார்வலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் தங்களுக்கான சீட் பெறுவதற்காக கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தனர். வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே திருநெல்வேலியில் முக்கிய சந்திப்புகளில் கட்சியினர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சீட் கிடைத்துள்ள மகிழ்ச்சியுடன் வேட்பாளர்கள் தங்கள் சொந்த தொகுதிகளுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்களுக்கு செண்டை மேளம், ஆளுயர மாலை, பொன்னாடைகள் என, வரவேற்பு அளிப்பதில் கட்சியினரிடையே உற்சாகம் கரைபுரண்டது. வேட்பாளரை வரவேற்க கட்சியினர் ஏராளமான வாகனங்களில் அணிவகுத்தனர். தொகுதிக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்த கையோடு, வாக்கு சேகரிப்பையும் வேட்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.

வேட்பாளர்களின் ஆரவாரமும் , வாகன அணிவகுப்பும் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை பாதிப்படையச் செய்தது. மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதை தேர்தல் அலுவலர்கள் கவனத்தில் கொண்டார்களா என மக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

நெல்லை எழுச்சி தினம்

திருநெல்வேலியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து சாதி, சமயம் கடந்து சாமானிய மக்கள் வீதிக்கு வந்து போராடிய திருநெல்வேலி எழுச்சி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தினத்தையொட்டி திருநெல்வேலியில் மாநகராட்சி அலுவலகம் எதிரே பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சி. மண்டபத்தில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கூடி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இவ்வாண்டும் திருநெல்வேலி எழுச்சி தினத்தையொட்டி வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க மணிமண்டபத்துக்கு சென்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி தன்னார்வலர்கள் தடுக்கப்பட்டனர். மண்டபம் மூடப்பட்டது. ஒருசிலரை அனுமதித்தால் கட்சியினர் திரண்டுவந்துவிடுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டது.

அரசியல் சாயம் பூசுவதா?

இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் கூறும்போது, “வரலாற்று சிறப்புமிக்க திருநெல் வேலி எழுச்சி தினத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலையிடுவதற்கும், தேர்தல் நடத்தை விதிகளுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. இந்த தினத்தின் முக்கியத்துவத்தை உணராமல் உள்ளனர். வ.உ.சி-க்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளோம்” என்றார்.

வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க அதிகாரிகள் தடைவிதித்த அதேநேரத்தில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் தலைவர்களின் சிலைகளுக்கு பெரும் கூட்டமாகச் சென்று மாலை அணிவித்துக்கொண்டிரு ந்தனர்.

உறுதிமொழி ஏற்பு

வ.உ.சி மணிமண்டபத்தில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் திருநெல்வேலி எழுச்சி தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்பள்ளியில் பாரதியார் பயின்ற வகுப்பறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் முருக முத்துராமன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x