Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட் பாளரை மாற்றக்கோரி, அதிமுகவினர் ஊர்வலம் மற்றும் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தூசி கே.மோகன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இதில், தூசி கே.மோகனுக்கு அதிமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
செய்யாறு சந்தை திடலில் ஆயிரக்கணக்கான அதிமுக வினர் நேற்று காலை ஒன்று கூடினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சுமார் 3 கி.மீ., தொலைவுக்கு ஊர்வலம் சென்றது. இறுதியாக, ஆரணி கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஊர்வலம் நிறைவுப்பெற்றது. இதையடுத்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, “செய்யாறு சட்டப் பேரவைத் தொகுதியின் வளர்ச்சிக்கு தூசி கே.மோகன் உதவவில்லை. ஒரு நன்மை யும் செய்யவில்லை. கிராமப் பகுதிகளுக்கு வரவில்லை. அரசு விழாவில் கலந்து கொள்வதோடு, தனது கடமையை முடித்துக் கொண்டார். இதனால், செய்யாறு தொகுதி வளர்ச்சி அடையவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக, செய்யாறு தொகுதி பின்னோக்கி சென்றுவிட்டது. தூசி கே.மோகன் தன்னுடைய நலனில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை மாற்றி விட்டு, வேறு ஒரு நபரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என்றனர்.
பின்னர், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி கே.மோகனை மாற்றம் செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் முழக்கமிட்டனர். மேலும் சில பெண்கள், சாலையில் உருண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அனை வரும் கலைந்து சென்றனர். அதிமுக வேட்பாளருக்கு எதிரான போராட்டத்தால், செய்யாறு நகரில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT