Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள 4757 வாக்குப்பதிவு இயந்திரங்களை, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. ஈரோடு ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்நிகழ்வில், பங்கேற்ற மாவட்டத் தேர்தல் அலுவலர் சி.கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்காக, 3,454 கட்டுப்பாட்டு இயந்திரம், 4,757 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்கள் 3, 695 தயார் நிலையில் உள்ளன. 8 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
வாக்குச்சாவடி மையத்தில், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பறையில் வைக்கப்படும். வெப்கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும். மேலும் பாதுகாப்பிற்கு காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக, ஈரோடு மாவட்டத்திற்கு 4 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 926 இடங்களில் 2215 வாக்குச்சாவடி மையங்கள், 526 கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2741 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பர்கூர் மற்றும் தாளவாடி ஆகிய பகுதிகளில் 118 பகுதிகள் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகளாக உள்ளது.
மலைப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வனத்துறை உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதில் கத்திரிமலை பகுதியில் வனத்துறையின் மூலம் சாலை சீர்செய்யப்பட்டுள்ளது. அங்கு 4 சக்கர வாகனத்தின் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுசெல்லப்படும். வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், கழுதைகள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும், என்றார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT