Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM

கோடைகால கொண்டாட்டத்துக்காக புது வரவு - ரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ‘குழந்தைகள் ரயில்’ : பேட்டரி கார் உள்ளிட்ட வசதிகளும் அறிமுகம்

திருச்சி

திருச்சி மாவட்டம் ரங்கம் அருகே மேலூரில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 125-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள், 100-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகின்றன.

இதுதவிர, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை குடில்கள், செயற்கை நீரூற்றுகள், நீர் தாவரங்களைக் கொண்ட குட்டைகள், சிறு மரப்பாலங்கள், குழந்தைகளுக்கான படகு குழாம், வண்ணத்துப்பூச்சிகள் குறித்து விளக்கும் காட்சிக்கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இங்கு தமிழக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டவர்கள், ஆராய்ச்சி மாணவ, மாணவிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

அதற்கேற்ப இங்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்தி தர வேண்டுமென வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையினருக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தற்போது தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா வளாகத்தில் குழந்தைகளுக்கான ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் ஒருமுறை பயணிக்க ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் குழந்தைகள் செல்லும் வகையிலான பேட்டரி கார் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர குழந்தைகளுக்கான பலூன் விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் மையப் பகுதியில் ஏற்கெனவே உள்ள விளையாட்டு உபகரணங்களுடன் தற்போது கூடுதலாக ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட உபகரணங்களும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிடம் கேட்டபோது, ‘‘வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வரக்கூடிய குழந்தைகளை ஈர்க்கும் வகையில் குழந்தைகள் ரயில் உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கோடை காலம் என்பதால் இன்னும் பல புதிய திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x