Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
குமாரபாளையம் நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர்.
குமாரபாளையம் நகராட்சியில் நாள்தோறும் சேகரமாகும் குப்பை மக்கும், மக்காத குப்பை எனத் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு சந்தைப்பேட்டை வளாகத்தில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தில் சேகரித்து வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இந்தக் கிடங்கில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதைக்கண்ட மக்கள் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைத்தனர். இங்கு 2 டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT