Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM
வங்கிகளில் சந்தேகப்படும்படி யான பணப் பரிமாற்றங்கள் குறித்து, தேர்தல் அலுவலர் களுக்கு தெரிவிக்க வேண்டும், என வங்கியாளர்களுக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் அலுவலர் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், வங்கியாளர்கள் வங்கியிலிருந்து கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது, தொகைக்கான வங்கி ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பணம் எடுத்துச் செல்லும் வங்கி ஊழியர்கள் உரிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான பணப் பரிமாற்றங்களை உடனடியாக வங்கியின் தலைமை இடத்திற்கு தெரிவித்து, தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப எடுத்துச்செல்லும் முகவர்கள், உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும்போது, வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து வங்கியாளர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும், என்றார்.
கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் அரவிந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஈஸ்வரன் மற்றும் வங்கியாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT