Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம்

திருப்பூர்

ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் வாழ்வுரிமை காக்கும் கவன ஈர்ப்புஉண்ணாவிரத போராட்டம், பொங்கலூர் பிஏபி அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.

பிஏபி பொங்கலூர் பகிர்மானகுழுத் தலைவர் டி.கோபால் தலைமை வகித்தார். பகிர்மான குழுத் தலைவர்கள் ஆ.சாமியப்பன்,எம்.வரதராஜ், கே.நல்லதம்பி,ரா.ஜெயபால் ஆகியோர் முன்னிலைவகித்தனர். குண்டடம் பகிர்மான குழுத் தலைவர் ப.ஈஸ்வரன் வரவேற்றார். திருமூர்த்தி நீர்தேக்க குழுத் தலைவர் கே.பரமசிவம் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: பாசனஅமைப்புகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். காண்டூர் கால்வாயில் விடுபட்ட பகுதிகள், பிரதானக்கால்வாய் மற்றும் கிளை கால்வாய்கள் மிகவும் சிதிலமடைந்துள்ளன. நீர் விரயமாவதைத் தடுக்க கால்வாய்களை சீரமைப்பதற்கான நிதியை ஒதுக்க வேண்டும். பிஏபி திட்டத்தில் 1000 ஏக்கருக்கு கீழ் பாசனம் பெறும் கால்வாய்களிலும் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பிஏபி திட்டத்திலும் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள்பேசினர். உண்ணாவிரதத்தை, திருமூர்த்தி நீர்த்தேக்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.ஆர். ராஜகோபால் நிறைவு செய்துவைத்தார்.

உடுமலை, பொங்கலூர், பல்லடம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x