Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 7-ல் பூச்சொரிதல் விழா அடிப்படை வசதிகளை செய்து தர ஆட்சியர் அறிவுரை

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 7-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தினார்.

இந்த விழா தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 7-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்காலிக கழிப்பறை, குடிநீர், தூய்மைப் பணி, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றை பேரூராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும்.

தடுப்புகள் ஏற்படுத்தி பக்தர்களை ஒழுங்குப்படுத்துதல், பாதுகாப்புப் பணிகள், சந்தை கேட்டில் அலங்கார வாகனங்களை நிறுத்தி பக்தர்களை மட்டும் அனுமதித்தல், பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகளை ஒலிபெருக்கி மூலம் செய்தல், 13 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும்.

திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்காக பெருவளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையும், தடையில்லா மின்சார விநியோகத்துக்கு மின்வாரியமும் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மருத்துவ முகாம்களுக்கும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், சிறப்பு பேருந்துகளை இயக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த கோயில் பணியாளர்களை மார்ச் 7 முதல் 8-ம் தேதி மாலை வரை ஷிப்ட் முறையில் பணியமர்த்த வேண்டும்.

மார்ச் 7 அதிகாலை 5 மணி முதல் 8-ம் தேதி பகல் 12 மணி வரை கட்டணமில்லாமல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்றார்.

கூட்டத்தில், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.ஜெயப்பிரீத்தா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x