Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போது திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 42 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாநகரில் கரோனா பரவல் குறைந்து, மக்களிடையே அச்சம் தணிந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் 18 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் 42 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதில், 50-வது வார்டு இனாம்தார் தோப்பு பகுதியில் மட்டும் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல, குத்பிஷா தெரு, கூனி பஜார் ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த க.ஷ்யாம் சுந்தர் கூறியது: கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் பெய்த தொடர் மழையால் மாநகரின் பள்ளமான இடங்களிலும், காலி மனைகளிலும் தேங்கியிருந்த மழை நீரில் டெங்கு கொசு புழுக்கள் உருவாகிவிட்டன.
மேலும், கரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மாநகராட்சி பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்றுகளில் தேங்கிய தண்ணீரிலும் டெங்கு கொசுப் புழுக்கள் உருவான நிலையில், கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு நடவடிக்கையாக பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், பூங்காவுக்குச் சென்ற பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இந்த பாதிப்பு நேரிடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே காரணம். அதாவது, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவான ஆதாரங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து, அப்புறப்படுத்தி, அபேட் மருந்து- புகை மருந்து தெளிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை. இனியாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு டெங்கு கொசு ஒழிப்புப் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT