Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
திருச்சி உறையூர் குறத் தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கிருந்து அரசு வழங்கும் விலையில்லா புத்தகப் பை, கலர் பென்சில்(கிரையான்ஸ்), கணித உபகரணப் பெட்டி ஆகியவை அடங்கிய பண்டல்கள் சுமை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
தகவலறிந்த திமுக பகுதிச் செயலாளர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தேர்தலுக்காக பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கவுள்ளதால், அந்தந்த பள்ளிகளுக்கே அனுப்ப வேண்டிய அரசின் நலத் திட்டப் பொருட்களை அனுப்பிவைப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்களுக்கு திமுகவினர் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருச்சி மேற்குத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ரமேஷ் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளித் தரப்பில் கூறிய தகவல் உண்மை என்று தெரிய வந்தது.
ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வர் படம் அச்சிடப்பட்ட புத்தகப் பை, கிரையான்ஸ் ஆகியவற்றை விநியோகிப்பது விதிமீறல். எனவே, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பிய பொருட்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றனர். இதையடுத்து, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் மீண்டும் எடுத்து வரப்பட்டு பள்ளியின் அறையில் வைத்து பூட்டப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT