Published : 03 Mar 2021 03:29 AM
Last Updated : 03 Mar 2021 03:29 AM
நாட்டில் உள்ள படைக்கலன் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து திருச்சி எச்இபிஎப் மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை தொழிலாளர்கள் உறுதிமொழி படிவத்தை கையொப்பமிட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு அனுப்பும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ராணுவம், காவல்துறை உள்ளிட்டவற்றுக்கு தேவையான படைக்கலன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இவற்றை முதலில் கார்ப்பரேஷன்மயமாக்கி, பின்னர் தனியார்மயமாக்க திட்டமிடும் முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நவல்பட்டில் செயல்படும் ஹை எனர்ஜி புரெஜெக்டைல் தொழிற்சாலை (எச்இபிஎப்) மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை சார்ந்த அனைத்துத் தொழிற்சங்கங்கள் கூட்டுக் குழு சார்பில் தொழிலாளர்கள் உறுதிமொழிப்படிவத்தில் கையொப்பமிட்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அத்துறையின் உற்பத்திப் பிரிவு செயலாளர் ஆகியோருக்கு அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த உறுதிமொழிப்படிவங்களை துப்பாக்கித் தொழிற்சாலை பொதுமேலாளர் சஞ்சய் திவேதியிடம் கூட்டுக்குழு சார்பில் நிர்வாகிகள் அருள்சேவியர், சுரேஷ்குமார், கண்ணன், சந்திரசேகர் ஆகியோர் வழங்கினர்.
இதேபோன்று உறுதிமொழிப்படிவங்களை எச்இபிஎப் பொது மேலாளர் சஞ்சய் குமார் சின்காவிடம் கூட்டுக் குழு அமைப்பாளர்கள் பிரபாகரன், இரணியன் ஆகியோர் வழங்கி மத்திய அரசின் செயலாளருக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT