Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

முதியோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

தென்காசி/ திருநெல்வேலி / தூத்துக்குடி

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய கரோனாதடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஜனவரி 16-ம் தேதிதடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக சுகாதாரபணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுடன் போராடும் 45 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்றுதொடங்கியது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 வரை கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை அரசு மருத்துவமனைகள், நெட்டூர், சொக்கம்பட்டி, இலத்தூர், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம், பாவூர்சத்திரம், சேர்ந்தமரம், வடகரை கீழ் பிடாகை,வாசுதேவநல்லூர், கடையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் தென்காசி சாந்தி மருத்துவமனை, மீரான் மருத்துவமனை, சங்கரன்கோவில் என்எம்எஸ் மருத்துவமனை ஆகியவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, கரோனா தடுப்பூசி பொறுப்பு மருத்துவர் மாலையம்மாள் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் நாளிலேயே 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 15 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

நீரிழிவு நோய், ஓராண்டுக்கும் மேலாக இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோர், மிதமான மற்றும் தீவிரமான இதய நோய் இருப்போர், சிறுநீரக நோய் இருப்போர், 2 ஆண்டுகளாக தீவிரமான சுவாசம் தொடர்பான நோய்கள் இருந்து அதற்கான மருத்துவ சிகிச்சை பெற்றோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போர், ஹெச்ஐவி தொற்று உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்களை கொண்ட 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்துகரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணை நோய்கள் இருக்கும் நபர்கள் தங்களுக்கு உள்ள இணைநோய் குறித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வந்தால் கரோனா தடுப்பூசியை இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள கோவின் 2.0 தளத்திலும், ஆரோக்கிய சேது செயலி மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். இவற்றில், தடுப்பூசி போடும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் விவரம், தடுப்பூசி போடப்படும் நாட்கள், நேரம், மையம் பற்றிய அட்டவணை இடம்பெற்றிருக்கும். பயனாளிகள் எங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பதை தீர்மானித்து, அதற்கான நேரத்தை பதிவு செய்துகொள்ள முடியும். தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்தும், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் அனைத்து பயனாளிகளும் ஆதார் அட்டை அல்லது புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x