Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 30 லட்சம் லாரிகள் இயங்காததால், ரூ.ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய ஆறு மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பொருளாளர் தன்ராஜ் கூறியது:
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சுங்கக்கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் உள்பட ஆறு மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஆறு மாநில லாரி உரிமையாளர்களுக்கும் ரூ.ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீர், மருந்து, காய்கறி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு மட்டும் லாரிகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
பிற மாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT