Published : 27 Feb 2021 03:17 AM
Last Updated : 27 Feb 2021 03:17 AM
முழுமையான ஒத்துழைப்பு அளித்திருந்தால் இன்னும் கூடுதல் வளர்ச்சியை தந்திருப்போம் என்றுமுன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவைக்கு வந்த பிரதமர் மோடி காரைக்காலில் 4 வழிச்சாலை, ரூ.496 கோடி மருத்துவக் கல்லூரி கட்டிடம், ரூ.49 கோடியில் சாகர்மாலா திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான விடுதி, சின்தடிக் ஓடுதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான 4 வழிச்சாலை பிரதமர் மன்மோகன் சிங்பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மோடி ஆட்சி வந்தது. 6 ஆண்டுகாலம் கழித்து அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். காரைக்காலில் 15 கிலோ மீட்டர் சாலை மட்டுமே உள்ளது. மீதமுள்ள தமிழக பகுதியில் 98 சதவீத சாலைகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டாமல் வேண்டுமென்றே புதுவை மக்களை ஏமாற்றும் வகையில் ரூ.2,426 கோடிக்கு திட்டங்கள் கொடுத்தது போல ஏமாற்றி உள்ளார்.
காரைக்காலில் ஜிப்மர் வளாகம் கட்டுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் இந்தத் திட்டத்தை காலதாமதப்படுத்தினார். சாகர்மாலா திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இப்போதுதான் தொடங்கி வைத்துள்ளார். மேரி கட்டிடம் உலக வங்கி நிதியில் கட்டப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் நிதி ஒரு பைசா கூட கிடையாது. இதனை திறந்து வைக்க பிரதமருக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? பொய்களையும், புரட்டுகளையும் பிரதமர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 52 திட்டங்களை தடுத்து நிறுத்தியது கிரண்பேடி தான். உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆணையரை நியமித்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனால் அந்த ஆணையரை நீக்கி தேர்தலை தடுத்ததே கிரண்பேடி தான்.
நான் ராகுலின் செருப்பை தூக்கி சென்றதாக மோடி கூறியுள்ளார். அன்றைக்கு நடந்த சம்பவம் என்னவென்று தெரியாமலும், தீர விசாரிக்காமலும், உயரிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசியுள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கநிதி ஒதுக்கினோம். அதை தடுத்ததும் கிரண்பேடி தான். தற்போதுள்ள ஆளுநர் தமிழிசை ரூ.80 கோடியில் சாலை பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த கோப்பை முடக்கி வைத்ததும் முந்தைய ஆளுநர் தான். பதவி போனதில் எந்த வருத்தமும் இல்லை. முழுமையான ஒத்துழைப்பை அளித்திருந்தால் இன்னும் கூடுதல் வளர்ச்சியை தந்திருப்போம். அதுதான் எங்களின் வருத்தம் என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT