Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM
சென்னை தாம்பரம் அருகே மின்வயர் அறுந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையே பல மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில் ஒன்று கடற்கரைக்கு புறப்பட்டது. சானடோரியம் அருகே சென்றபோது, உயரே சென்ற மின்விநியோக வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதனால், அந்த மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.
சீரமைப்பு பணிகளை தொடங்குவதற்காக உடனடியாக, மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆங்காங்கே ரயில்கள் பாதி வழிலேயே நிறுத்தப்பட்டன.
ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். காலை 7.30 மணிக்கு பிறகு, விரைவு ரயில்கள் செல்லும் மாற்றுப் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், குறைந்த எண்ணிக்கையிலேயே புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நேரம் ஆகஆக கூட்டம் அதிகரித்தது.
மதியம் 12.30 மணி அளவில் வயர் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு தாம்பரம் - கடற்கரை தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. நடுவழியில் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதாலும், பல மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாலும், பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT